தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன், கர்நாடக தொழிலாளர் நலத்துறை முதன்மை அதிகாரியாக உள்ளார். கரோனா ஊரடங்கு வேளையில் வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் மூலம்ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து தொழிலாளர்களுக்கு இலவச பொருட்களை வழங்கி வந்தார்.
இந்நிலையில், கர்நாடக அரசுநேற்று முன்தினம் இரவு மணிவண்ணனை திடீரென பணியிட மாற்றம் செய்தது. இதனிடையே, பணியிட மாற்ற உத்தரவை திரும்பப் பெறக்கோரி, கரோனாதடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள், பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தொழிலாளர்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள சிறு, குறு, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்குஎவ்வித முன் அறிவிப்பும் செய்யாமல் ஊதியத்தை குறைத்துள்ளன. பல தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் மணிவண்ணன் ஈடுபட்டிருந்தார். இதனால் கோபமடைந்த தொழிலதிபர்கள் முதல்வரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
அதேபோல தொழில் துறை அமைச்சர் ஷிவராம் ஹெப்பார்அரசின் நிவாரண பொருட்களை ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குமணிவண்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் மணிவண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.