கோப்புப்படம் 
இந்தியா

டிக்கெட் மட்டும் முக்கியமல்ல: விமானப் பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்?: லாக்டவுன் முடிந்தபின் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு

பிடிஐ

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள லாக்டவுன் முழுமையாக முடிந்தபின், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவேற்றம் செய்திருப்பது கட்டாயம் என்ற மத்திய அரசு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க, இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட செயலிதான், ஆரோக்கிய சேது. இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் தற்போது ஆரோக்கிய சேது முதலிடத்தில் உள்ளது.

இந்தச் செயலி இதுவரை 9.8 கோடிக்கும் அதிகமானோர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்தது. இந்தச் செயலி, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் மூலம் செயல்படுவதால், கரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும்.

இதன் மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது. நாடு முழுவதும் கரோனா பரவல் வேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை தங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும் இன்று முதல் டெல்லியிலிருந்து 7 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் தங்களின் ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியைக் கட்டாயமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ரயில்வே சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் லாக்டவுன் முழுமையாக முடிந்தபின், விமானப் பயணிகள் அனைவருக்கும் ஆரோக்கிய செயலியை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறும் முன் ஆரோக்கிய செயலியை அதிகாரிகள் அல்லது, விமான நிறுவன ஊழியர்களிடம் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படாது என்ற விதிமுறை கொண்டுவரப்பட உள்ளது

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “விமானப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை தங்கள் செல்போனில் பதிவேற்றம் செய்வது குறித்த முதல்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தங்கள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலி இல்லாவிட்டால் அவர்களை விமானத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற திட்டமும் ஆலோசிக்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பாக மத்திய அரசு இதில் முடிவெடுக்கும்” எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT