காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 87) ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஞாயிறு இரவு 8.45 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் உடல்நிலையை இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழுவினர் பரிசோதித்து இரவிலிருந்து கண்காணித்து வருகின்றனர். மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருந்தாலும் அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தால் நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது அதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
டெல்லியில் பரவலாக கரோனா தொற்று இருப்பதால் மருத்துவர்கள் மன்மோகன் சிங்கிற்கு கரோனா பரிசோதனை எடுக்க முடிவு செய்து மாதிரிகளை எடுத்தனர். ஆனால் பிற்பகலுக்குப் பின் மன்மோகன் சிங்கிற்கு காய்ச்சல் குறைந்து, உடல்நலம் தேறினார். அதன்பின் மாலையில் வந்த பரிசோதனை முடிவுகள் படி மன்மோகன் சிங்கிற்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்மோகன் சிங் உடல்நிலை மருந்துகளுக்கு நன்கு ஒத்துழைத்து அவரது உடல்நலம் தேறி வருவதால், அவர் அடுத்த ஒரிரு நாட்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.