உங்கள் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திசெலுத்திவிட்டார் என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரத்தை (நோட்டீஸ்) பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ரயிலில் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் வழங்கினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ரயிலில் செல்லும்போது, அவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அந்தக் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் தெரிவித்தார். எனினும், இவர்களின் கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வே அமைச்சகம் ஏற்கும் என்றும் மீதமுள்ள 15 சதவீதக் கட்டணத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாபின் கிடர்பா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான அமரீந்தர் சிங் ராஜாவாரிங், பிஹாரின் முசாபர்பூருக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோரை காண தனது தொண்டர்களுடன் ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தார். ரயிலின் ஜன்னல் வழியாக தொழிலாளர்களிடம் அமரீந்தர் சிங் ராஜா துண்டு பிரசுரம் ஒன்றை வழங்கினார்.
அதில் அவர்களின் ரயில்பயண டிக்கெட்டுக்கான பணத்தைசோனியா காந்தி செலுத்திவிட்டதாகவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜக்கார் ஆகியோர் தொழிலாளர்களை அனுப்பி வைப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர்இதுபோன்று ரயில் நிலையத்தில்புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் துண்டுபிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்வது இதுவே முதல்முறை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.