குஜராத்தின் படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்நின்று நடத்திவரும் 22 வயது இளைஞர் ஹர்திக் படேல், தேச அளவில் போராட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு சமூகத்தினரின் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய அவர், குஜ்ஜார் மற்றும் குர்மிஸ் உட்பட பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த '27 கோடி மக்கள்' இடஒதுக்கீட்டுப் பலனைப் பெறுவதற்காக தேச அளவிலான போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.
படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்க வலியுறுத்தி, ஆகஸ்ட் 25-ம் தேதி அகமதாபாத்தில் மிகப் பெரிய அளவில் பேரணி நடத்தியதன் மூலம் கவனத்தை ஈர்த்தவர் ஹர்திக். அந்தப் பேரணையைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்த நிலையில், தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் பல்வேறு சமூகத்தினரின் தலைவர்களை ஹர்திக் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
27 கோடி மக்களை திரட்ட முடிவு
இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறும்போது, "குஜராத்தில் நிகழ்த்தியதை நாங்கள் தேச அளவில் கொண்டு செல்ல விரும்புகிறோம். எங்களுடன் தொடர்புடைய மக்கள் 12 மாநிலங்களில் உள்ளனர்.
நாங்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல... இது மராத்தான். இது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை கூட செல்லும். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள எங்களது சமூகத்தைச் சேர்ந்த 27 கோடி மக்களை ஒன்று திரட்டவுள்ளோம். இந்த இயக்கத்தை தேசத்தின் அனைத்துப் பகுதிக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன். எங்கேயெல்லாம் படேல் சமூகத்தினருக்கு நான் தேவைப்படுகிறேனோ அங்கெல்லாம் நான் செல்வேன்" என்றார்.
குர்மிஸ், குஜ்ஜார்ஸ் முதலான சமூகத்தினரை குறிப்பிட்டே, தங்கள் படேல் சமூகத்தினருடன் தொடர்புடைய 27 கோடி மக்கள் என்று ஹர்திக் விவரித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "பிஹாரின் லக்னோவின் மிகப் பெரிய பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக, இந்தியா முழுவதும் உள்ள படேல்களை அழைப்போம்.
எல்லா சமூகத்தின் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு
நம் நாடு 60 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதற்கு தற்போதுள்ள இடஒதுக்கீடு முறையே காரணம். இதுவே, வல்லரசு ஆவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், இடஒதுக்கீடு காரணமாக உயர் கல்வி பெற முடியாத நிலை இருக்கிறது. ஒவ்வொரு சமூகத்திலுள்ள ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு அவசியம். இதற்காக, புதிய சீர்திருத்தம் செய்து இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தினால் மட்டுமே நாடு வலிமை பெற்று புதிய உயரத்துக்குச் செல்லும்.
கடந்த 1984-ல் இடஒதுக்கீடுகளை படேல் சமூகம் எதிர்த்தது. இன்று இடஒதுக்கீட்டு முறை பலவீனமாகிவிட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்; எம்.பி.ஏ. டிகிரி முடித்தவர் சேல்ஸ்மேனாக சுற்றிக்கொண்டிருக்கிறார்" என்றார் ஹர்திக்.
அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் குறித்து கேட்டதற்கு, "நாங்கள் எந்த ஒரு தனி நபரையோ, கட்சியையோ அல்லது சமூகத்தையோ எதிர்க்கவில்லை. எங்களுக்குத் தரப்பட வேண்டிய உரிமைகளுக்காகவே போராடுகிறோம்" என்றார்.
இணையத்தில் பரவி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுடனான புகைப்படம் குறித்து கேட்டதற்கு, ''குஜராத் சுகாதார அமைச்சர் நிதிபாய் படேல் மற்றும் பலருடனும் நான் புகைப்படங்களில் இருக்கிறேன். நான் ஒரு அமைப்பை நடத்துகிறேன். பாஜக, காங்கிரஸிடம் இருந்தும் பலர் வருகிறார்கள். ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு எதையும் சொல்லிவிட முடியாது.
படேல்களுக்கு இடஒதுக்கீடு ஏன் தேவை?
குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராடுவதன் காரணத்தை விவரிப்பதாக கூறிய ஹர்திக், "அன்று லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டார்கள். அதற்கு அவர்களிடம் இருந்த வலிதான் காரணம்.
நீங்கள் (படேல்கள்) மிகுந்த வசதியாக இருக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். ஆனால், 5-ல் இருந்து 10 சதவீதத்தினர் மட்டுமே அப்படி வசதியாக இருக்கிறார்கள். எங்கள் சமூகத்தில் உள்ள மற்ற அனைவரும் அப்படி இல்லை.
70 லட்சம் மக்களுக்கு ஒரு தேவை (இடஒதுக்கீடு) இருக்கிறது என்று அவர்களே கேட்டால், அரசியலமைப்பு மாற்றப்படவே வேண்டும்" என்றார் அவர்.
அரசியல் விருப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசியல் பார்வையும், பிரதமர் மோடி ஆடை அணியும் விதம் மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்த அவரது சிந்தனைகள் முதலானவை தனக்குப் பிடிக்கும் என்றார் ஹர்திக்.
மேலும், "நான் அரசியல்வாதி அல்ல. அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை" என்றார் ஹர்திக் படேல்.