கரோனா வைரஸால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 90 நாடுகளுக்கு தூதரக ரீதியாகவும், மருத்துவ உதவிகளையும் வழங்க ரூ.100 கோடியில்மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கரோனா வைரஸ் பரவி, தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பிடியில் இருந்து மீள இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகள் ஓரளவு பலன் அளிப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் பல நாட்டுத் தலைவர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை வழங்கும்படி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று ஏற்றுமதி தடையையும் நீக்கி,அந்த மருந்தையும் பாராசிட்டமால் மாத்திரைகளையும் ஏற்றுமதி செய்தார். இதுவரை 67 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா செய்துள்ளது. மருந்துப் பொருட்களை உதவி செய்வதுடன், மருத்துவக் குழுவினர் மற்றும் விரைவு செயல் படையினரை குவைத், மாலத்தீவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதற்காக இந்தியாவுக்குப் பல நாட்டு தலைவர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கூடுதலாக இன்னும் எத்தனை நாடுகளுக்கு தூதரக ரீதியில், மருத்துவ உதவிகளை வழங்க முடியுமோ அவ்வளவும் செய்ய வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.100 கோடியில் மத்திய அரசு திட்டமும் தயாரித்துள்ளது. அதன்படி அடுத்த சில வாரங்களில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முகக் கவசங்கள், கையுறைகள், கவச உடைகள், மருந்துப் பொருட்கள், பரிசோதனை கருவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்க ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுடெல்லி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் நேற்று கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க, பல நாடுகள் இந்தியாவின் மருத்துவ உதவிகளைக் கேட்டுள்ளன. பிரதமர் மோடியின் உத்தரவுபடி, அந்த நாடுகளுக்கு விரைவில்மருத்துவ உதவிகள் வழங்கப்படும். சர்வதேச அளவில் விமானப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், மருத்துவப் பொருட்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதில் மிகப் பெரிய சிக்கல் உள்ளது. எனினும், விமானப் படை விமானங்கள், கப்பற்படையின் ‘கேசரி’ கப்பல், சிறப்பு விமானங்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன’’ என்றனர்.
இதற்கிடையில் மருத்துவ உதவிகள் வழங்குவது குறித்து பிரதமர் மோடியும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். மேலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஜோர்டான் உட்பட மேற்கு ஆசிய நாடுகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இத்திட்டத்தை முன்னின்று கண்காணித்து செயல்படுத்த வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா, பிரேசில் உட்பட 67 நாடுகளுக்கு இந்தியா உதவி உள்ளது.