கரோனா வைரஸ் தாக்கப்பட்டு மகன் உயிரிழந்த ஒரு வாரத்திற்குள்ளாக தந்தையும் உயிரிழந்த பரிதாபம் காஷ்மீரில் இன்று நடந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 97 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,206 ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் கரோனா பாதிப்புக்குள்ளானர்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
''காஷ்மீரில் மொத்தம் 861 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 383 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக இருந்த நிலையில், ஸ்ரீநகரில் ஆலம்காரி பஜார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திங்கள்கிழமை கரோனா நோயால் உயிரிழந்தார்.
60 வயதுமிக்க இம்முதியவர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் சமீபத்தில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மே 7 ஆம் தேதி தனது 34 வயது மகனை கரோனா வைரஸுக்குப் பறிகொடுத்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இம்முதியவரும் கரோனா நோயால் இன்று காலை உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இது பத்தாவது மரணம். ஸ்ரீநகரில் இது நான்காவது மரணம் ஆகும்''.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.