வந்தேபாரத் மிஷன் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 4000 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வந்தே பாரத் மிஷன் சிறப்பு நடவடிக்கையின் மூலமாக 5-வது நாளாக கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கிடையே அயல் நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் 7 சிறப்பு விமானங்களில் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரோனா வைரஸ் லாக்டவுன் விதிமுறைகளுக்கேற்ப பிரத்யேக இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தகுந்த சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோலவே பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் புனியா சாலிலா ஸ்ரீவத்சவா கூறியதாவது:
‘‘வந்தேபாரத் மிஷன் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 4000 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதுபோலவே 5 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் மட்டும் 101 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பல இடங்களில் சிக்கிக் கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.’’ எனக் கூறினார்.