கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில் அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். கடைசியாக நடந்த கூட்டத்திலும் மாநில முதல்வர்கள் 9 பேரில் 5 பேர் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தினர். இதையடுத்து மூன்றாவது கட்டமாக மே 3-ம் தேதி முதல் 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது
இருப்பினும் கடந்த மாதம் 20-ம் தேதிக்கு பின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க விதிகளை மத்தியஅரசு தளர்த்தியது. நாட்டில் உள்ள 775 மாவட்டங்களில் கரோனா பாதிப்புள்ளான மாவட்டங்கள், மிதமான பாதிப்ப , பாதிப்பு இ்ல்லாதவை என சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாகப் பிரித்து அறிவித்தது.
மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள், ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி 5-வது கட்டமாக இன்று பிற்பகலில் ஆலோசி்த்து வருகிறார். இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்வேறு மாநில முதல்வர்களும் காணொலி மூலம் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆலோசனையில் ஊரடங்கிற்கு பிறகு என்ன செய்வது, நீட்டிக்கும் தேவையுள்ளதா, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குதல், விதிகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.