கோவிட் 19க்கு எதிரான போராட்டம் என்பது தொழிலாளர்களை சுரண்டுவதற்கு அல்ல என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் தொழிற்சாலைகள், கடைகள், வணிக, வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடுமுழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதும் சில மாநிலங்களில் இன்னும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கு செல்வது உறுதிபடுத்தப்படாத சூழ்நிலையே நிலவுகிறது. இதில் பல மாநிலங்களில் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:
''பல மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி வருகின்றன, ஆனால் கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது தொழிலாளர்களை சுரண்டுவதற்கும், அவர்களின் குரலை அடக்குவதற்கும், அவர்களின் மனித உரிமைகளை நசுக்குவதற்குமானதல்ல.
பாதுகாப்பற்ற பணியிடங்களை அனுமதிப்பதை ஏற்க முடியாது. தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அடிப்படைக் கொள்கைகளில் எந்தவிதமான சமரசமும் இருக்க முடியாது''
இவ்வாறு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.