டெல்லியிலிருந்து நாளை (12-ம் தேதி) முதல் 15 ரயில்கள் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் என்ற ரயில்வே துறையின் நேற்றைய அறிவிப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்த நிலையில் அவரின் கருத்துக்கு எதிர்க் கருத்தாக இளம் தலைவர் ஒருவர் குரல் எழுப்பியுள்ளார்.
லாக்டவுன் முடியும் முன்பே ரயில் சேவை படிப்படியாகத் தொடங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சிக்குள் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
இதுமட்டுமல்ல புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தபோதிலும் காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் வரவேற்ற நிலையில் பலர் விமர்சித்தனர். இதுபோல் பல்வேறு சம்பவங்களிலும் காங்கிரஸ் கட்சிக்குள் ஒத்த கருத்து இருந்ததில்லை.
ரயில்வே துறையின் அறிவிப்பைப் பாராட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில், “மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில் சேவையை மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோன்ற கவனச் செயல்பாடு சாலைப் போக்குவரத்திலும், விமானப் போக்குவரத்திலும் பின்பற்றித் தொடங்கப்பட வேண்டும்.
பொருளாதார, வர்த்தகச் செயல்பாடுகள் தீவிரமாகத் தொடங்குவதற்கு ஒரே வழி சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, பயணிகள்,சரக்குப் போக்குவரத்தை தொடங்கினால் மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியி்ன் ஊடக ஒருங்கிணைப்பாளர் ராதிகா கேரா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா வைரஸுடன் வாழவேண்டும் என்பதை நாம் கற்றுக்கொண்டிருந்தாலும், கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்பதையும் கவனிப்பது அவசியம்.
லாக்டவுன் தொடங்கியதிலிருந்து இன்றுதான் மிகப்பெரிய அளவில் 4,213 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகள் செய்த தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்பது அவசியம். இயல்பு நிலைக்குத் திரும்பும் முன் கரோனா வளைகோடு சமநிலைக்கு வருவதற்காக காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இளம் தலைவர் கேரா மூத்த தலைவர்களின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது முதல் முறையல்ல. கடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மிலந்த் தியோரா, ஆம் ஆத்மி வெற்றிக்கு பாராட்டுத் தெரிவித்தபோது கடுமையாக விமர்சித்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனக்பூரி தொகுதியில் போட்டியிட்டு ராதிகா கேரா தோல்வி அடைந்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை அப்போது ப.சிதம்பரம் பாராட்டியபோது, பிரணாப் முகர்ஜியின் மகள் ஷ்ராமிஸ்தா முகர்ஜியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.