புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லத் தொடர்ந்து சாலையில் நடப்பதையும், ரயில்வே இருப்புப்பாதையில் நடந்து செல்வதையும் பார்க்கும்போது பெரும் கவலையளிக்கிறது, அவர்களுக்காக இயக்கப்படும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை அதிகமாகப் பயன்படுத்த மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மாநில அரசுகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. ஆனால், இந்த ரயில்களில் செல்லப் பணம் இல்லாமல் பல தொழிலாளர்கள் இன்னும் சாலை மார்க்கமாகவும், ரயில்வே இருப்புப்பாதை வழியாகவும் நடந்து செல்கின்றனர்.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே ரயில்வே இருப்புப்பாதையில் நடந்து வந்து, அசதியில் அதில் படுத்து உறங்கிய 16 தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியது. இதுபோன்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்க அதிகமான ஷ்ராமிக் ரயில்களை இயக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் கவுபா அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சாலை வழியாகவும், ரயில்வே இருப்புப்பாதை வழியாகவும் நடந்து செல்வது வேதனையாக இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஷ்ராமிக் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஆதலால், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதையும், ரயில்வே இருப்புப்பாதையில் செல்வதையும் மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை, ரயில்வே இருப்புப்பாதை மார்க்கமாக நடந்து சென்றால் அவர்களுக்குப் போதுமான கவுன்சலிங் அளித்து, தங்குமிடம், உணவு, குடிநீர் அளித்து அவர்களை ஷ்ராமிக் ரயில்கள் மூலமோ அல்லது பேருந்துகள் மூலமோ அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்களை விரைவாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க, ரயில்வே துறை சார்பில் அதிகமான ஷ்ராமிக் ரயில்களை இயக்க மாநில, யூனியன் தலைமைச் செயலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவரும் ஷ்ராமிக் ரயில்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு விரைவாகச் செல்ல மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்''.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.