மும்பை மகராஜ் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நாடு திரும்பிய இந்தியர்கள் பரிசோதனை செய்யப்படும் காட்சி. 
இந்தியா

வந்தே பாரத் மிஷனின் 5-வது நாள்: வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை அழைத்துவந்த 7 சிறப்பு விமானங்கள்

ஏஎன்ஐ

இந்தியாவின் வந்தே பாரத் மிஷன் சிறப்பு நடவடிக்கையின் மூலமாக 5-வது நாளாக கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கிடையே அயல் நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் 7 சிறப்பு விமானங்களில் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரோனா வைரஸ் லாக்டவுன் விதிமுறைகளுக்கேற்ப பிரத்யேக இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தகுந்த சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் காரணமாக அயல்நாடுகளில் சிக்கித் தவித்து வந்த இந்தியர்களை அழைத்துவரும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. வந்தே பாரத் மிஷன் எனும் சிறப்பு நடவடிக்கைத் திட்டத்தின் மூலம் 5-வது நாளான இன்றுவரை 7 சிறப்பு விமானங்களில் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையின் மூலம் இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்கள், லண்டனிலிருந்து டெல்லி பின்னர் பெங்களூரு, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பை பின்னர் ஹைதராபாத், டாக்காவிலிருந்து மும்பை, துபாயிலிருந்து கொச்சி, அபுதாபியிலிருந்து ஹைதராபாத், கோலாலம்பூரிலிருந்து சென்னை மற்றும் பஹ்ரைனிலிருந்து கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்குத் திரும்பும் இந்தியர்களை அழைத்து வந்துள்ளன.

கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, சுதந்திரத்திற்குப் பின்னர், இந்தியா மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளும் நடவடிக்கையாக வந்தே பாரத் மிஷன் செயல்படுத்தப்பட்டு வருகிறது..

வரவிருக்கும் நாட்களில் 12 நாடுகளில் இருந்து மேலும் சுமார் 15,000 இந்தியர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானங்களில் நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT