காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது87) திடீர் நெஞ்சுவலி காரணாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய நோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “மன்மோகன் சிங்கிற்கு இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இரவு 8.45 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் உடல்நிலையை இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலம் சார்பாக மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். 87 வயதானாலும் சத்தான உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளால் நல்ல உடல்நலத்துடன் மன்மோகன் சிங் உள்ளார். கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் கூட மன்மோகன் பங்கேற்றார்.
இருமுறை பிரதமராகவும், நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் இருந்த மன்மோகன் சிங் 2009-ம் ஆண்டு எயம்ஸ் மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல் வெளியானவுடன் பல்வேறு தலைவர்கள் அவர் விரைவாக உடல்நலம் தேற வாழ்த்துத் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் உடல்நிலை குறித்துக் கேட்டுக் கவலையடைந்தேன். அவர் விரைவாக குணமடையவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்ட செய்தியைப் பார்த்தேன். சிறந்த பிரதமர், உண்மையான ஜென்டில்மேன், பணிவானவர், அறிவாற்றல் மிக்கவர் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மன்மோகன் சிங் உடல்நிலை குறித்துக் கேள்விப்பட்டு ஆழ்ந்த கவலையாக இருக்கிறேன். விரைவில் முழுமையாக குணமடைவார் என நம்புகிறேன். ஒட்டுமொத்த இந்தியாவும் முன்னாள் பிரதமருக்காக பிரார்த்தனை செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.