இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தொற்று இல்லை: ஹர்ஷ் வர்தன்

செய்திப்பிரிவு

கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக கரோனா தொற்று கேஸ்கள் எதுவும் உருவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஞாயிறன்று தெரிவித்தார்.

குணமடையும் விகிதமும் 30%க்கும் மேல் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், மேலும் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வேகமாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகத் தரவுகள் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் 1,511 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஒருநாளில் அதிக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கையாகும் இது.

சனிக்கிழமையன்று இந்தியா மொத்தம் 86,000 டெஸ்ட்கள் மேற்கொண்டது, இப்போது இந்தியா நாளொன்றுக்கு 95,000 சாம்பிள்களை சோதனை செய்யும் அளவுக்கு திறன் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் ஒரு சோதனைச் சாலை என்று தொடங்கி தற்போது 472 கோவிட்-19 சோதனைச்சலைகள் உள்ளன.

நாட்டில் மொத்தம் 4,362 கரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. இதில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 856 நோயாளிகள் மிதமான அல்லது மிக மிதமான நோய் அறிகுறிகள் உள்ளோர் அனுமதிக்கப்பட முடியும்.

“கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். கரோனா நோய் பாதிப்பு இரட்டிப்பு அடையும் இடைவெளி கடந்த 3 நாட்களாக 12 நாட்களாக அதிகரித்துள்ளது, குணமடைவோர் விகிதம் 30%ஐக் கடந்துள்ளது. 60,000 கோவிட் -19 நோயாளிகளில் 20,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மரண விகிதம் இன்னமும் 3.3% என்ற அளவிலேயே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தொற்றுக்கள் இல்லை.” என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கு 72 லட்சம் என் -95 ரக மாஸ்க்குகளை விநியோகித்துள்ளது. 36 லட்சம் பாதுகாப்பு கவசங்களை வழங்கியுள்ளது.

கரோனா வைரஸுக்கு பலி எண்ணிகை 2,109 ஆக அதிகரித்துள்ளது, புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 128 அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 3,277 புதிய கேஸ்கள் தோன்றியுள்ளன.

SCROLL FOR NEXT