இந்தியா

வெளிமாநிலங்களில் சிக்கிய 1,250 தமிழர்கள்; மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் நாளை திருச்சிக்கு வருகை

ஆர்.ஷபிமுன்னா

வெளிமாநிலங்களில் சிக்கிய தமிழர்களுடன் தமிழகத்திற்கு முதலாவது ரயில் நாளை திருச்சிக்கு வந்து சேர்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் 3 மணிக்குக் கிளம்பியதில் சுமார் 1,250 தமிழர்கள் பயணிக்கின்றனர்.

வெளிமாநிலங்களில் சிக்கியவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப ஏப்ரல் 30 இல் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு பொது விதிமுறை வெளியிட்டது. அதன்படி, பெரும்பாலான மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஊர்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் திரும்புகின்றனர். டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பிஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்குத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் திரும்புகின்றனர்.

அதேபோல், தமிழகத்தில் இருந்தும் வெளிமாநிலத்தினர் சிறப்பு ரயில்களில் கிளம்பிச் சென்றபடி உள்ளனர். எனினும், வெளிமாநிலங்களில் சிக்கியவர்களில் இதுவரை எவரும் சிறப்பு ரயிலில் தமிழகம் திரும்பவில்லை. இதற்கு அந்த ரயில்களின் பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது காரணமானது. மேலும், தமிழகத்தில் திடீர் என அதிகரித்து வந்த கரோனா பரவல் அச்சமும் அதில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் ஷோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முதல் நேரடி சிறப்பு ரயில் இன்று திருச்சிக்குக் கிளம்பியது. இது, வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழர்களுடன் தமிழகம் வரும் முதல் ரயிலாகக் கருதப்படுகிறது.

மகாராஷ்டிராவின் ஷோலாப்பூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிக்கிய தமிழர்கள் இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இதே ரயிலில் ஷோலாப்பூரில் சிக்கிய 96 இளம்பெண்கள் உள்ளிட்ட 179 பேர் கிளம்பியுள்ளனர்.

96 இளம்பெண்களுக்கு கனிமொழி எம்.பி. உதவி

இவர்களில் 96 இளம்பெண்கள் கடந்தவாரம் இரு வீடியோ பதிவை, திமுக மகளிர் அணித் தலைவரும் அக்கட்சியின் மக்களவை துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி.க்கு அனுப்பி இருந்தனர். அதில் தமக்கு இருந்த வசதிக் குறைவின்மையையும் குறிப்பிட்டவர்கள் தங்கள் ஊர் திரும்ப உதவும்படியும் வேண்டினர்.

இதைக் கவனத்தில் கொண்ட தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி, மகாராஷ்டிராவின் சில தமிழக அதிகாரிகளிடம் பேசினார். அவர்கள் முயற்சியினால் ஷோலாப்பூர் மாவட்ட ஆட்சியர் அப்பெண்கள் இருந்த முகாமிற்குச் சென்று சந்தித்தார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஷோலாப்பூரில் சிக்கியவரான அகிலா கூறும்போது, ''இங்குள்ள தனியார் வியாபார நிறுவனத்தில் 3 மாதப் பயிற்சிக்காக வந்து சிக்கிவிட்டோம். இங்கு கனிமொழி எம்.பி.யின் தலையீட்டினால் எங்களுக்கு உரிய வசதிகள் கிடைததுடன், தமிழகம் திரும்பவும் முயற்சி எடுக்கப்பட்டது'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பந்தர்பூரில் இருந்து தமிழகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்த ரயிலில் அந்த 96 இளம்பெண்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது. இதற்காக முன்கூட்டியே அனைவரும் ஷோலாப்பூரில் இருந்து பந்தர்பூருக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களுடன் இந்த சிறப்பு ரயில் நாளை காலை 6 மணிக்குச் சென்று சேரும் என எதிர்நோக்கப்படுகிறது. பிறகு அதன் பயணிகள் அனைவரும் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தனிமையாக இருக்க அனுப்பி வைக்கப்படுவர்.

ஒருவேளை கரோனா தொற்றுள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையையும் தமிழக அரசு அளிக்கப்பட உள்ளது. இது தமிழக அரசால் வெளிமாநிலங்களில் இருந்து திரும்ப அனுமதிக்கப்பட்ட முதல் ரயில் ஆகும்.

தொடர்ந்து குஜராத்தில் 2,400 தமிழர்களுடன் தயாராக இருக்கும் 2 ரயில்களுக்கும் தமிழகம் திரும்ப அரசு அனுமதித்துள்ளது. இதேபோல், டெல்லியில் இருந்தும் ரயில்களில் தமிழர்களை அழைத்துவர ஏற்பாடுகள் நடந்தேறி வருகிறது.

SCROLL FOR NEXT