உ.பி.க்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக அரசு செய்து வருகிறது எனவும் அனைவரும் உ.பி.க்கு திரும்பலாம் என்றும் உத்தரப் பிரதேசம் பற்றிய ‘பாசிட்டிவ்’ செய்திகள் வரும் நிலையில் அங்கிருக்கும் தொழிலாளர்கள் பலர் உணவின்றி, வேலையின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு நடைபயணத்தைத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிலர் தங்கள் உடைமைகளுடன் சைக்கிளில் புறப்படுகின்றனர். லக்னோவிலிருந்து முங்கேலி 700 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால் பசியிலிருக்கும் குடும்பத்தினருக்கு இது ஒரு தொலைவாகத் தெரியவில்லை.
இப்படிக் கிளம்பிய லாலாராம் என்பவரது குடும்பத்தில் இவர், மனைவி, தந்தை, 4 வயது மகள் ஆகியோர் வெயிலையும் துணிந்து சொந்த ஊருக்கு நடைபயணமாக கிளம்பியுள்ளனர். இவர் கட்டிடத் தொழிலாளி லக்னோ கோம்தி நகர் குடிசையில் வசிப்பவர். லாக்டவுன் தொடங்கிய மார்ச்சிலிருந்து இவருக்கு வேலை கிடையாது. எப்போதாவது இவருக்கும் இவரைப்போன்ற மற்றவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
“பூரிக்கள் கிடைக்கும், ஆனால் பணம் இல்லாமல் எத்தனை நாட்கள் காலந்தள்ள முடியும்” என்கிறார் லாலாராம்.
இவரது மனைவி சந்தோஷி, “நாங்கள் என்ன செய்வது? எங்கள் நிலைமைகளை அரசு கண்டு கொள்ளாமல் குருடாக உள்ளது. எங்களுக்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய வேண்டாம் எங்களை வீட்டுக்கு அனுப்பினால் போதும்” என்றார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கோபாவேசமாக.
“இங்கு செத்தால் அனாதையாகச் சாக வேண்டும் ஊரில் செத்தால் குறைந்தது கிராமத்தினரும் உறவினர்களும் இருப்பார்கள்” என்று கூறுகிறார் சந்தோஷி.
வெளிமாநிலங்களில் இருக்கும் உ.பி. தொழிலாளர்களை மீண்டும் அழைத்துவர முனைப்பு காட்டும் உ.பி. அரசு மாநிலத்தில் இருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு பராமுகமாக இருப்பதாக சமூகத் தொண்டர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சைக்கிளில் சென்ற புலம்பெயர் தொழிலாளிகள் இருவர் வாகனம் மோதி பலி:
புதன் இரவு புலம்பெயர் தொழிலாள தம்பதி கிருஷ்ணா மற்றும் பிரமீளா லக்னோ ஜானகிபுரம் குடிசைப்பகுதியிலிருந்து சத்திஸ்கர் பேமத்தாரா மாவட்டத்துக்கு சைக்கிளில் புறப்பட்டனர். ஆனால் லக்னோ தாண்டி புறநகர்ப்பகுதில் ஒரு வாகனம் இவர்களை மோதி கொன்று விட்டுச் சென்றது. இவர்களது இரண்டு குழந்தைகள் தப்பித்தன, ஆனால் கடுமையான காயங்களுடன் போராடி வருகின்றனர்.
மேலும் தொழிலாளர்கள் பலர் கரோனா தொற்று குறித்தும் அச்சம் கொண்டு புறப்படுகின்றனர். தேஜ்ராம் என்ற தொழிலாளர் கூறும்போது, “இங்கு இருக்கும் போதே ஒன்றையும் கவனிக்காத அரசு, கரோனா தொற்றினால் மட்டும் கவனிக்கப் போகிறதா என்ன?”என்றார் விரக்தியுடன். இவருக்கு மார்ச்சில் தொடங்கிய லாக்டவுனுக்குப் பிறகே வெறும் 5 கிலோ கோதுமை, அரிசி மட்டுமே கிடைத்துள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த இன்னொரு தொழிலாளர் தினேஷ் குமார், “தனது வருமானத்துக்காக அரசு மதுபானக்கடைகளை திறக்கிறது. எங்கள் வேலைகளையும் தொடங்கலாம் அல்லவா? எங்களைப் போன்றவர்களுக்காக யார் யோசிக்கிறார்கள்?” என்றார்.
இவர்களில் பலர் ஆன்லைன் தளத்தில் விண்ணப்பித்தும் இன்னும் பதில் வந்தபாடில்லை.
உ.பி. தொழிலாளர்கள் நிலவரம் இவ்வாறாக உள்ளது.
-ஏஜென்சி செய்திகள்