கோப்புப்படம் 
இந்தியா

கோவை, காட்பாடியிலிருந்து இரு சிறப்பு ரயில்கள் நள்ளிரவில் இயக்கம்: புலம்பெயர் தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானார் சொந்த மாநிலம் அனுப்பி வைப்பு

ஐஏஎன்எஸ்

கோவை மற்றும் காட்பாடியிலிருந்து இரு சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று இரவு பிஹார், ஜார்கண்ட் மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். கடந்த ஒரு மாதத்துக்குப்பின் கடந்த வாரம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்தமாநிலம் அனுப்பமத்திய அரசு அனுமதியளித்தது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசுகளும் கேட்டுக்கொண்டதன்படி சிறப்பு ரயில்களை ரயில்ேவ இயக்குகிறது. 24 பெட்டிகளில் 1200 புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டு சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ரயிலில் செல்லும் பயணிகள் அனைவரும் சமூக விலகலைக் கடைபிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதால், ஒரு பெட்டியில் 54 பேர் மட்டுமே பயணிக்கின்றனர்.

ஒவ்வொரு மாநிலமும் சிறப்பு ரயில்களையும், பேருந்துகளை இயக்கியும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வருகின்றனர். இதில் தமிழகத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களை சொந்த மாநிலம் அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

அதன்படி கடந்த புதன்கிழமை முதல் சிறப்பு ரயிலை தமிழக அரசு கேட்டுக்கொண்டது படி காட்பாடியிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் ஹதியாவுக்கு ரயில்வே இயக்கியது. இதில் 1,140 பேர் பயணித்தனர். இவர்கள் ரயிலில் ஏற அனுமதிக்கப்படும் முன் முழுமையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்

இதைத் தொடர்ந்து கோவையிலிருந்தும், வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்தும் இரு சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பிஹாருக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் தமிழகஅரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்

காட்பாடியிலிருந்து புறப்பட்ட ரயில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹதியாவுக்கும், கோவையிலிருந்து இயக்கப்பட்ட ரயில் பிஹார் மாநிலம், சஹார்ஸாவுக்கும் சென்றன. இதில் கோைவயிலிருந்து புறப்பட்ட ரயிலில் 1,140 புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் புறப்படும்முன் தமிழக சுகாதாரத்துறையினர் முழுமையாக கரோனா பரிசோதனை செய்து, சமூக விலகலைக் கடைபிடித்து பயணிக்கஅனுமதித்தனர்.

அதேபோல காட்பாடியிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் ஹதியாவுக்கு 1,140 புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றனர். புலம்பெயர்தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி சார்பில் பரிசோதனை நடத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் அங்கிருந்து 16 பேருந்துகள் மூலம் காட்பாடிக்கு அழைத்துவரப்பட்டு சிறப்பு ரயிலில் சொந்த மாநிலம் அனுப்பி வைக்கப்பட்டனர்

SCROLL FOR NEXT