கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைய உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கரோனா வைரஸின் தாக்கம் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினார். காணொலிக் காட்சிமூலம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பாஜக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது, மகாராஷ்டிராவில் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பாஜக, நவநிர்மான் சேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, “மகாராஷ்டிராவில் மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என்றார். இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகஅளவில் இருக்கிறது. அங்கு இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.