பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தொடர்புடைய 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய கெடு விதித்துள்ளது
கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அடுத்த 9 மாதங்களுக்குள் அதாவது 2020, ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் தொற்று, லாக்டவுன் போன்ற காரணங்களால் விசாரணையில் ஏற்பட்ட தொய்வால் காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது
வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் சட்டத்துக்கும், காலக்கெடுவுக்கும் உட்பட்டு விசாரணையை தள்ளிச் செல்லாமல் உரிய நேத்துக்குள் தீர்ப்பு வழங்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசியல்ரீதியாக பெரும் பாதிப்புகளை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வழக்கு என்பதால், அனைத்துத் தரப்பிலும் இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது
அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
தலைவர்கள் மீது தனி வழக்கும், லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தனி வழக்கும் என்று இரண்டு வழக்குகளாகப் பிரிக்கப்பட்டன. தலைவர்கள் மீதான வழக்கு உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி நீதிமன்றத்திலும், கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது. இதில், ரே பரேலி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது தொடரப் பட்ட வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. சிறப்பு நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் கடந்த 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.
அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு 2017, ஏப்ரல் 19-ம் தேதி தீர்ப்பு அளித்தது.
அந்தத் தீர்ப்பில், “தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அவர்கள் அனைவரும் விசாரணையைச் சந்திக்க வேண்டும். இந்த வழக்கை தினந்தோறும் நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை விசாரணை நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கூடாது” எனத் தெரிவித்தனர்.
இதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு வழக்கு நடந்து வந்தது. ஆனால் திட்டமிட்ட காலத்துக்குள் விசாரணையை முடிக்க முடியாததால் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அடுத்த 9 மாதங்களுக்குள் அதாவது 2020, ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கிட வேண்டும்என உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டது.
ஆனால், கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் மேலும் தாமதம் ஏற்பட்டதால் வழக்கின் காலக்கெடுவை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையில் காணொலியில் இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டிக்க எழுதிய கடிதம் கடந்த 6-ம் தேதி கிடைத்தது. நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கிட காலக்கெடுவை நீட்டிக்கிறோம். சாட்சியங்களை உறுதி செய்யவும், விசாரிக்கவும் தேவைப்பட்டால் நீதிபதி யாதவ், காணொலி முறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விசாரணை அனைத்தும் ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்ளாக அனைத்து விசாரணைகளையும் முடித்து தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என உத்தரவிட்டனர்.