இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பரிசோதனைக்குப் பிறகு ஊழியர்கள் அனுமதி | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மீண்டும் திறப்பு: சோதனைகளுக்குப் பிறகு ஊழியர்கள் அனுமதி

ஏஎன்ஐ

பெங்களூருவில் இயங்கிவரும் இந்திய அரசு நிறுவனமான விமானக் கட்டுமானப் பணிகளைச் செய்துவரும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (HAL) நீண்டநாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அந்நிறுவனம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பின் மத்தியில் நாடு முழுவதும் தனது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள நிறுவனம் பணியாளர்கள், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான கடுமையான சோதனைகளை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஷிப்ட் முறைகளில் மாற்றம், பயோமெட்ரிக் வருகை இடைநிறுத்தம் மற்றும் தொழிற்சாலைகளில் ஷிப்ட் மாறும்போது மற்றும் அடிக்கடி வேலை செய்யும் அனைத்துப் பகுதிகளையும் சுத்தப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

ஊழியர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பணியிடத்தில் முகக்கவசங்கள் அணிவது நடைமுறையில் உள்ளது. பணியிடங்கள் மற்றும் கருவிகள் பாதுகாப்பான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.

அலுவலகங்கள், பணியிடங்களில் நுழைவு மற்றும் பொதுவான பகுதிகளில் கை சுத்திகரிப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. கைகளைச் சுத்திகரிப்பு செய்துகொண்ட பிறகுதான் அவர்கள் உள்ளே வரமுடியும்.

சுறுசுறுப்பான வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஆன்லைன் பயன்பாடுகளுக்கான (இ ஃபைலிங்) ஒரு ஐ.டி. தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதார ஆலோசனைகள் மற்றும் நல்ல சுகாதாரம் குறித்த சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் பிரிவுகள் / அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, வணிகத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன''.

இவ்வாறு பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT