இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் வேகம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதியும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 52952 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1783 பேர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் வேகம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘இந்தியாவில் கரோனா வைரஸ் பரவும் வேகத்தின் மாதிரியை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி பார்த்தால் இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் எனத் தெரிகிறது.
ஆனால் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை கூற முடியாது. அந்த சமயத்தில் மட்டுமே கூற முடியும். அதுபோலவே கரோனா தொற்றின் வீரியம் இதே அளவு இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதையும் இப்போதே கூற முடியாது.’’ எனக் கூறினார்.