இந்தியா

பாஜகவுக்கு எதிராக டெல்லியில் மீண்டும் மத நல்லிணக்க மாநாடு: எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் மீண்டும் மத நல்லிணக்க மாநாடு நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக இந்த மாநாட்டை ஐக்கிய ஜனதா தளம் கூட்டுகிறது.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் டெல்லியின் தால்கட்டோரா அரங்கில் மத நல்லிணக்க மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டிய இந்த மாநாட்டில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்மூலம் மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த மாநாட்டில் பங்கேற்ற 17 கட்சிகள் தேர்தலில் ஒன்றுசேர முடியாததுடன், அதிமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலில் படுதோல்வி கிடைத்தது.

இந்நிலையில், பிஹார் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வரும் செப்டம்பர் 22-ம் தேதி டெல்லியில் மத நல்லிணக்க மாநாடு மீண்டும் நடைபெற உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் கூறும்போது, “இந்த தலைவர்களை வைத்து பிஹார் சட்டப் பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க முடியாது. எனினும் மக்கள் முன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான எதிர்ப்பை காட்டுவதன் மூலம் அதன் அரசியல் லாபம் தேர்தலிலும் அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்கு மாறு கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிண மூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜனதா பரிவாரில் உள்ள பிற கட்சி களுக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் நேரில் சென்று அழைப்பு விடுக்க உள்ளார். எனினும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதில் பங்கேற்பாரா என்பது சந்தேகமே. பிஹார் தொகுதிப் பங்கீட்டில் தேசியவாத காங்கிர ஸுக்கு மிகக் குறைந்த தொகுதி கள் ஒதுக்கப்பட்டதாலும், அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட 15 ஊழல் தலைவர்கள் பட்டிய லில் சரத் பவார் பெயர் இடம் பெற்றிருந்ததும் இதற்கு காரணங் களாகக் கூறப்படுகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் கலந்து கொள்வதால் மாநாட்டுக்கு மம்தா பானர்ஜி வருவாரா என்பதும் கேள்விக்கு உரியதாகியுள்ளது.

கடந்த முறை நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் அதிமுக பங்கேற்றது. மாநாட்டில் அக்கட்சி எம்.பி. தம்பிதுரை, முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். ஆனால் இந்தமுறை அதிமுகவுக்கு பதிலாக திமுகவை அழைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT