இந்தியா

மேகி தடையும்... தடை நீக்கமும்!

செய்திப்பிரிவு

கடந்த ஜூன் மாதம் சுவிஸ் நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையமானது, மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக காரீயம் இருப்பதாக எழுந்த புகாராலும், எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளுக்கோமேட்) என்ற சுவைகூட்டி குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்தியிருப்பதாலும், ஓட்ஸ் சுவை நூடுல்ஸ் போன்ற புதிய தயாரிப்புகளுக்கு உரிய அனுமதி வாங்கவில்லை என்பதாலும் தடை விதிப்பதாக தெரிவித்திருந்தது.

உணவு பாதுகாப்பு, தரநிர்ணயச் சட்டம் 2006-ன் விதிமுறைகளை நெஸ்லே நிறுவனம் மீறிவிட்டதாகவும் மகாராஷ்டிரா அரசு வாதிட்டது.

இதனிடையே, மேகி தடையை நீக்கக் கோரி நெஸ்லே மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவு தற்காலிகமானது, உரிமை மீறல் எனக் கூறியது. மேலும், மேகி மாதிரிகளை பரிசோதித்த ஆய்வுக் கூடங்கள் அனைத்துமே அங்கீகரிக்கப்படாதவை என்றும் நெஸ்லே தெரிவித்தது.

இந்நிலையில் மேகி மனுவை இன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.காண்டே, பி.பி.கோலப்வாலா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், "மேகிக்கு தடை விதித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவு இந்திய அரசியல் சாசன பிரிவு 14-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாகும்" எனத் தெரிவித்துள்ளது.

ராம் விலாஸ் பாஸ்வான் கருத்து:

அண்மையில், "தற்போதைய ஆராய்ச்சிகளின் முடிவுகள் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு என்று தெரிவிக்கப்படும் நிலையில், விரைவில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்" என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியது பரவலாக விமர்ச்சிக்கப்பட்டது. இந்நிலையில் மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

வழக்கு தொடர முடிவு:

இதற்கிடையில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் மீது ரூ.640 கோடி நஷ்ட ஈடு கோரி அரசு வழக்கு பதிவு செய்ய முடிவெடுத்துள்ளது.

நுகர்வோர் அமைப்பான என்சிடிஆர்சி மூலம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையற்ற வர்த்தக நடைமுறை, தவறான லேபிள், திசைதிருப்பும் விளம்பரம் ஆகியவற்றின் மூலம் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்பட்டதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய நுகர்வோருக்கு தேவையற்ற வணிக நடைமுறையைப் பின்பற்றி மாகி நூடுல்ஸ் குறித்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்ததால் நஷ்ட ஈடு கோரப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT