இந்தியா

நாடு முழுவதும் ஊரடங்கு எதிரொலி: இந்தியாவில் சேவைத் துறை முற்றிலும் முடங்கியது

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் சேவைத் துறை நடவடிக்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மேலும் உலகளவில் இதன் பாதிப்பு உள்ளதால் சர்வதேச அளவிலான தேவையும் முடங்கியுள்ளது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிறுவனங்களில் லே - ஆஃப் (ஊதியமில்லா விடுப்பு) அதிகளவில் அறிவிக்கப்படும் அபாயம் உள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் தொழில் துறை முடங்கியுள்ளதால் பலரது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மார்ச் 28-ம் தேதியில் இருந்து மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் பலரது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நிகிகி மற்றும் ஐஹெச்எஸ் சர்வீசஸ் மேலாளர் குறியீடு அடிப்படையில் ஏப்ரலில் 5.4 ஆகக் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் சேவைத் துறை குறியீடு 49.3 புள்ளிகளாக இருந்தது. சேவைத் துறை குறியீடு 14 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 புள்ளிகளுக்குக் கீழாக சரிந்துள்ளது என்று ஐஹெச்எஸ் மார்கிட் அமைப்பைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜோ ஹேய்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1930-ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசமான பொருளாதார தேக்க நிலை உலகம் முழுவதும் நிலவும் எனவும் இந்த அமைப்பு கணித்துள்ளது. 1990-ம் ஆண்டுக்குப் பிறகு தாராள மயமாக்கல் கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மிக மோசமான அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT