கரோனா வைராஸால் கொண்டு வரப்பட்ட லாக்டவுனில் சிக்கி துன்பப்பட்டிருக்கும் மக்களின் கைகளில் பணத்தை கொடுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம், ஆனால் மத்தியஅரசு பெட்ரோல், டீசலுக்கு கலால்வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசைச் சாடியுள்ளார்
சர்வேதச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தநிலையில் அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லி்ட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி வரியில் மத்திய அரசு நேற்று உயர்த்தியது.இதேபோல, டெல்லி அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள கருத்தில், “ மத்திய அரசு தனது நிதிப்பாற்றுக்குறையை போக்குவதற்கு கடன் வாங்க வேண்டும். கரோனா வைரஸால் லாக்டவுனில் பொருளாதாரம் சரி்ந்து கிடக்கும்இந்த சூழலில் அதிகமான வரிகளை விதிக்கக் கூடாது.
பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில், உச்சத்தில் இருக்கும் போதுதான் புதிய வரி விதிக்கலாம், வரியை உயர்த்தலாம். ஆனால் இப்போது வரிவிதிப்பது கொடூரமானது. ஏற்கெனவே லாக்டவுனால் பெரும்துன்பத்தில் இருக்கும் நடுத்தர மக்கள், ஏழைகளை இந்த வரிச்சுமை மேலும் வேதனைப்படுத்தும், ஏழ்மையில் தள்ளும்
நாட்டு மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு பணத்தை நேரடியாக வழங்கிடுங்கள் என்று மத்திய அரசை தொடர்்ந்து மன்றாடி வருகிறோம். ஆனால், மத்திய அரசோ மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்தே பணத்தை எடுக்கிறது. கொடுமை “ எனத் தெரிவித்துள்ளார்