மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு சூழல் மிகவும் கவலையளிக்கிறது, அம்மாநில முதல்வருடன் விரைவில் ஆலோசனை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதியும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகஅளவு கரோனா பரவி வருகிறது. அங்கு 15,525 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 583ல் இருந்து 617 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 819 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் கரோனா பரவியுள்ளது. அங்கு கரோனா பாதிப்பு சூழல் மிகவும் கவலையளிக்கிறது. கரோனா பரவலை தடுக்க கூடுதல் கண்காணிப்பும், நடவடிக்கையும் தேவை. இதுதொடர்பாக அம்மாநில முதல்வருடன் விரைவில் ஆலோசனை நடைபெறும். அப்போது மகாராஷ்டிராவில் கரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்’’ எனக் கூறினார்.