புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிச் செல்ல ரயில் கட்டணத்தில் 85 சதவீதம் தள்ளுபடி அளிப்பதாக ரயில்வே துறை தெரிவித்தாலும் ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தேஷ்முக் கேள்வி எழுப்பியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது ரயில்வே கட்டணம் வசூலித்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலையின்றி, வருமானமின்றி இருக்கும் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது.மேலும் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்ேவ மானியமாக வழங்கும் மீதமுள்ள 15சதவீதத்தை மாநில அரசுகள் செலுத்தினால் போதும் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தெரிவித்தார்கள்.
ஆனால், மத்திய அரசின் மற்றொரு அறிவிப்பில் எந்த மாநிலத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறதோ அந்த மாநில அரசுதான் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது
இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வே தள்ளுபடி செய்வது உண்மையா என்பதில் குழப்பமான சூழல் நீடித்து வந்தது. கட்டணத்தில் 85 சதவீதம் தள்ளுபடி தருகிறோம் என ரயில்ேவ இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவி்லலை
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு ரயிலில் அனுப்பும் போது ரயில் கட்டணத்தில் 85 சதவீதத்தில் தள்ளுபடி தரப்படும் என கூறப்பட்டது. ஆனால் ரயில்வேதுறை சார்பில் இதுவரை எந்தஅதிகாரபூர்வ அறிக்கையும் வெளிவரவில்லை.
புலம்பெயர் தொழிலாளர்கள் ஏற்கனவே வேலயில்லாமல் வறுமையில் இருக்கிறார்கள் அவர்களிடம் கட்டணத்தை ரயில்வே வசூலிக்கக்கூடாது.
மகாராாஷ்டிரா அரசு சார்பில் நான் கேட்கிறேன், புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்ேவ ஏற்றுக்கொள்கிறதா என்பதில் தெளிவான நிலைப்பாடு அவசியம். இதுவரை எந்த அறிக்கையும் ரயில்வே சார்பில் இல்லையே. ஆதலால் எங்கள் சந்தேகத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்