இந்தியா

வாரணாசியில் சிக்கிய தமிழர்களில் 45 பேர் சென்னை புறப்பட்டனர்

ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிக்கிய தமிழர்களில் 45 பேர்நேற்று 2 பேருந்துகளில் சென்னைக்கு புறப்பட்டனர்.

ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் ரயில் மற்றும் பேருந்து மூலம் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களும் பேசி அவர்களுக்கு ‘லாக்டவுன் பாஸ்’ வழங்கி வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிக்கிய தமிழர்களின் விவரம் பெற்ற பிறகும் தமிழக அரசிடம் இருந்து அவர்களுக்கான அனுமதி கிடைக்கவில்லை.

இதற்காக கடந்த 4 நாட்களாக நாட்டுக்கோட்டை சத்திரம் உள்ளிட்ட இடங்களில் காத்திருந்த 45 தமிழர்கள் அனுமதி பெறாமலேயே 2 பேருந்துகளில் நேற்று காலையில் சென்னைக்கு புறப்பட்டனர். இதற்கு இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பதாலும் வாரணாசியிலும் கரோனா தொற்று அதிகரித்து வருவதும் காரணம் ஆகும்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வாரணாசியில் உதவி வந்த துணை ஆட்சியரும், தமிழருமான மணிகண்டன் ஐஏஎஸ் கூறும்போது, “பேருந்து பயணிகள் அனைவருக்கும் இரு தினங்களுக்கு முன் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா தொற்று இல்லை என்றசான்றிதழுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள்ஊர் திரும்பியதும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கருதுகிறேன். இங்கு எஞ்சியுள்ள தமிழர்களையும் சொந்த ஊருக்குஅனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

32 தமிழர்கள் இன்று வருகை

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரிலும் 32 தமிழர்கள் சிக்கியிருந்தனர். இவர்களின் விவரம் பெற்ற பின்பும் தமிழக அரசிடம் இருந்து 3 நாட்களாக அனுமதி கிடைக்கவில்லை.

எனினும் மற்றொரு தமிழரும்கோரக்பூர் மாவட்ட ஆட்சியருமான விஜயேந்திர பாண்டியன்மூலம் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு ஒரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் இன்று தமிழகம் சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக எல்லையில் இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கெனவே, வாரணாசியில் இருந்து3 பேருந்துகளில் 127 தமிழர்கள்திருவள்ளூரில் நுழைந்தபோது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இது, நேற்றுடன் முடிந்து அனைவரும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் இருந்து 36 தமிழர்கள் மதுரைக்கு லாக்டவுன் பாஸ் பெற்று ஒரு பேருந்தில் புறப்பட்டனர். இவர்கள் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் நுழைந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். விண்ணப்ப நடைமுறைகளுக்கு பிறகு அவர்களுக்கு நேற்று காலை அனுமதி வழங்கப்பட்டது. நேற்று மாலை மதுரை சென்ற இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

SCROLL FOR NEXT