அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப்புலிட்சர் நினைவாக பத்திரிகை துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய விருதாக உலகளவில் இது மதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்செயல்படும் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் இந்த பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. பத்திரிகை, நாடகம், இசைத் துறையின் 23 பிரிவுகளில் புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் பத்திரிகை துறையின் புகைப்பட பிரிவில் காஷ்மீரை சேர்ந்த சன்னி ஆனந்த், முக்தர் கான், தர் யாசின் ஆகியோர் புலிட்சர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. அங்கு இயல்பு நிலை திரும்பிய பிறகு ஊரடங்கு படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது.
காஷ்மீரில் ஊரடங்கு அமலில் இருந்தபோது ஏபி செய்தி நிறுவனத்தை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர்கள் சன்னி ஆனந்த், முக்தர் கான், தர் யாசின் ஆகியோர் மிகச் சிறப்பான புகைப்படங்களை எடுத்தனர். இதற்காக 3 பேரும் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக கொலம்பியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.