சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் எச்சரித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதியும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் இன்று கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக டெல்லி மாநில அரசு அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். கரோனா பரவி வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
கரோனா தவிர சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.’’ எனக் கூறினார்.