இந்தியா

கரோனா பீதியிலும் உற்சாகம்: உ.பி.யில் ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு மது விற்பனை; பிற்பகலில் இருப்பு காலி; காற்றில் பறந்த சமூக விலகல்

ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்த 3-ம் கட்ட லாக்டவுனின் முதல் நாளான நேற்று உத்தரப் பிரதேசத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டவுடன் முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

பல்வேறு நகரங்களில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டவுன் மதுவகைகள் இருப்பு பிற்பகலில் விற்றுத் தீர்ந்துவிட்டதால், கடையை மூடிவிட்டு உரிமையாளர்கள் புறப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்கமாக நாள்தோறும் ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை மது விற்பனையாகும், ஆனால், 40 நாட்களுக்குப் பின் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டால் மதுப்பிரியர்கள் ஆர்வத்துடன் வந்து பாட்டில்களாக அள்ளிச்சென்றனர். இதனால் ரூ.100 கோடிக்கு ஒரேநாளில் மது விற்பனையானது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் லக்னோ நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.3 கோடிக்கு மது விற்பனையானது என கலால்வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு நகரங்களில் மது வாங்க மதுக்கடைகள் முன் நின்றிருந்த மதுப்பிரியர்கள் சமூக விலகல் குறித்த அக்கறையின்றி நின்றிருந்தனர். கடந்த 40 நாட்களாக சமூக விலகல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மது விற்பனை தொடங்கியவுடன் சமூக விலகல் காற்றில் பறக்கவிடப்பட்டது.

கலால் வரிக்கான தலைமைச் செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி கூறுகையில், “எந்த நிறுவனமும் ஒரே நாளில் ரூ.100 கோடி வருவாய் ஈட்டி மாநிலத்தில் பார்த்தது இல்லை. மாநிலத்தில் உள்ள 25,600 மதுக்கடைகளும் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டு இருந்தன. முதல் நாளான நேற்று ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக மது விற்பனையாளர் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

இதில் 75 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுவாகும். மதுவகைகளை பலர் இருப்பு வைப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் 750 மி.லி. ஒரு பாட்டில் ஒன்று மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவர். அல்லது 375 மி.லி. இரு பாட்டில்கள் அல்லது 180 மி.லி. 3 பாட்டில்கள், பீர் 2 பாட்டில்கள் மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தக் கட்டுப்பாடு அடுத்த 3 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT