இந்தியா

குஜராத் அரசின் லாக்டவுன் பாஸ் தமிழகத்தில் அனுமதிக்காததால் கிருஷ்ணகிரியில் தடுத்து நிறுத்தப்பட்ட 36 தமிழர்கள் 

ஆர்.ஷபிமுன்னா

குஜராத் அரசால் அளிக்கப்பட்ட லாக்டவுன் பாஸுக்கு தமிழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அங்கிருந்து கடந்த சனிக்கிமை ஒரு பேருந்தில் கிளம்பி வந்த 36 தமிழர்கள் கிருஷ்ணகிரியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

குஜராத்தின் அகமதாபாத், சூரத், பரோடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தமிழர்கள் துணி, பாத்திரம் போன்ற வியாபாரம் செய்து பிழைக்கின்றனர். சிறிய அளவில் வியாபாரம் செய்து வரும் இவர்கள் தமிழகத்தில் இருந்து அவ்வப்போது குஜராத் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இதுபோல், கடைசியாக வந்தவர்கள் கரோனா ஊரடங்கினால் சிக்கிவிட்டனர். இவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள நிலையில் அவர்களுக்குத் தங்கள் வீடு திரும்புவது கட்டாயமானது.

இந்தவகையில், மதுரையைச் சேர்ந்த தமிழர்கள் குஜராத்தின் பரூச் மாவட்டத்தின் அங்கேஷ்வரிலும் சிக்கி இருந்தனர். கடந்த 15 நாட்களாக தங்கள் வீடு திரும்ப அவர்கள் எடுத்த முயற்சிக்கு நேற்று முன் தினம் பலன் கிடைத்துள்ளது.

இதற்கு மத்திய அரசு வெளிமாநிலத்தில் சிக்கியவர்களைத் திருப்பி அனுப்ப ஏப்ரல் 30 இல் இட்ட உத்தரவு உதவியுள்ளது. இதன் அடிப்படையில் பரூச் மாவட்ட ஆட்சியர் 36 தமிழர்களும் மதுரை வரை செல்ல ‘லாக்டவுன் பாஸ்’ அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிறு காலை 9 மணிக்குக் கிளம்பியவர்கள் இன்று காலை 8 மணிக்கு மதுரை சேரும்படி திட்டமிட்டிருந்தனர். இதன்படி, அவர்கள் பேருந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக எல்லைகளில் பிரச்சினை இன்றி நுழைந்தது.

ஆனால், அவர்களது சொந்த மாநிலமான தமிழகம் வந்ததும் அனைவருக்கும் பெருந்த ஏமாற்றம் கிடைத்தது. கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் நேற்று இரவு 8 மணிக்கு கிருஷ்ணகிரியில் நுழையும் போது, ஜுஜுவாடி எனும் தமிழகக் காவல்துறையின் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தத் தகவலை கிருஷ்ணகிரியின் காங்கிரஸ் எம்.பி.யான டாக்டர் செல்லகுமாருக்கு பேருந்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 36 தமிழர்களும் ஒசூர் ரயில் நிலையம் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் முறையான அனுமதி பெற்று அனைவரும் மதுரையில் உள்ள அவர்கள் வீடுகளுக்கு விரைவில் அனுப்பப்படுவார்கள் என அனைவரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யும் வாய்ப்புகளும் உள்ளன.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் அப்பேருந்தின் பயணிகளில் ஒருவரான காதர் மைதீன் (36) கூறும்போது, ''குடும்பத்தை விட்டுப் பிரிந்து கஷ்டப்பட்ட எங்களது நிலையைக் கண்டு பரூச் ஆட்சியர் மனம் இறங்கினார். கிளம்புவதற்கு முன்பாக எங்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து அதன் ஆதாரமான எங்கள் கைகளில் சீல் முத்திரை வைக்கப்பட்டது.

இதைக் காட்டியதால் வழியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், எங்கள் சொந்த மாநிலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது'' எனத் தெரிவித்தார்.

இதே விவகாரத்தில் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மற்றொரு பயணியான மதுரை வீரன்(38) கூறும்போது, ''எங்களது ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை சோதித்து உறுதிப்படுத்திய பின் முறையாகத்தான் லாக்டவுன் பாஸ் அளிக்கப்பட்டது.

இதற்காக பரூச் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் அனுமதி பெறப்பட்டதா என எங்களுக்குத் தெரியவில்லை. எங்களை மதுரைக்கு அனுப்பினால் நாம் அனைவரும் மீண்டும் கரோனா சோதனைக்கு உட்பட்டு அங்கு தனிமைப்படுத்திக் கொள்ளத் தயாராக உள்ளோம்'' எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, எல்லையில் சிக்கிய மதுரைவாசிகளுக்கு அதன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசனும் போன் செய்து விசாரித்திருந்தார். கல்லூரியில் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளித்து உணவும் வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT