பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதச் செயல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல், மேஜர் உட்பட 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 5 வீரர்களின் உயிர் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன். தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு, ஒரு வீட்டில்பணயக் கைதிகளாக இருந்தஅப்பகுதியைச் சேர்ந்தவர்களை ராணுவ வீரர்கள் மீட்டுள்ளனர். இந்த சண்டையில் வீரமரணம் அடைந்த வீரர்கள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அந்த வீரர்களுக்கு தலைமையேற்றுச் சென்ற கர்னல் அசுதோஷ் சர்மாவும் வீரமரணம் அடைந்துள்ளார்.
அவரது வீரமும் உயிர் தியாகமும் நமக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்த சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் இரண்டு பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் குறிக்கோளோடு செயல்படுகிறது. பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாத செயல்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று உறுதியோடு தெரிவிக்கிறேன். எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர்.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அப்பாவிபொதுமக்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிட்டால்தான் அமைதி நிலவும். தனது சொந்தமக்களுக்குக் கூட அமைதியையும் நிம்மதியையும் அளிப்பதில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டவில்லை என்பதையே அதன் நடவடிக்கைகள் காட்டுகிறது. இவ்வாறு ராணுவ தளபதி நரவனே தெரிவித்தார்.