கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதியில் பொதுத்தேர்தல் நடத்த ஏதுவாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியான கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதியை, பாகிஸ்தான் சட்ட விரோதமாக உரிமைகொண்டாடி வருகிறது. அப்பகுதியில் வரும் செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கும், அதுவரை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் 2018 ம் ஆண்டின் கில்ஜித்-பல்டிஸ்தான் சட்டத்தில் திருத்தம் செய்ய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி அளித்தது.
இதற்கு பாகிஸ்தானிடம் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும்லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள், கில்ஜித் - பல்டிஸ்தான்பகுதிகள் ஆகியவை இந்தியாவின் முழுமையான சட்டபூர்வமான மற்றும் மாற்ற முடியாத ஒருங்கிணைந்த பகுதியாகும்என்று பாகிஸ்தான் தூதரிடம்இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாகிஸ்தானுக்கோ அந்நாட்டு நீதிமன்றத்துக்கோ எந்த உரிமையும் கிடையாது என்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தான் தூதரிடம் கூறப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.