கரோனா வைரஸைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அழைத்து வர முதல்கட்டமாக 3 கப்பல்கள் மாலத்தீவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் புறப்பட்டன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக வளைகுடா நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணி நிமித்தமாக, சுற்றுலாவுக்காகச் சென்றுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். கரோனாவில் இந்தியர்கள் ஏராளமானோர் வேலையிழந்தும், சிலரின் விசா காலம் முடிந்தும் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர்.
இவர்களை அழைத்து வர மிகப்பெரிய அளவில் மீட்புத் திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரத்தில் தீவிரமாக ஆலோசித்தது. இந்த மிகப்பெரிய மீட்புத் திட்டத்தில் இந்திய விமானப் படை, கப்பல் படை, ஏர் இந்தியா விமானங்கள் மூன்றும் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கப்பல்கள் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட உள்ளன. இந்த முதல்கட்ட மீட்புப்பணி வரும் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இதற்காக இன்று அதிகாலை மும்பை கடற்கரையிலிருந்து ஐஎன்எஸ் ஜலஸ்வா, ஐஎன்எஸ் மாகர் ஆகிய இரு கப்பல்கள் மாலத்தீவுக்கும், ஐஎன்எஸ் ஷர்துல் துபாய்க்கும் அனுப்பப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று கப்பல்களும் இந்தியர்களை அழைத்துக்கொண்டு கொச்சி திரும்பும். இதில் ஐஎன்எஸ் மாகர், ஷர்துல் ஆகிய இரு கப்பல்களும் தென்கடலோரப் படையைச் சேர்ந்தவை. ஜலஸ்வா கிழக்கு கடற்கடைப் படையைச் சேர்ந்தவை.
மேலும், வியாழக்கிழமையன்று இரு ஏர் இந்தியா விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்படுகின்றன. ஒரு விமானம் கொச்சியிலிருந்து அபுதாபிக்கும், மற்றொரு விமானம் கோழிக்கோட்டிலிருந்து துபாய்க்கும் இயக்கப்பட உள்ளது என அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் அனைவரும் இந்த முறை தங்கள் பயணிக்கும் விமானத்துக்குக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தாயகம் திரும்பியபின் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை, தனிமைப்படுத்தும் இடம், மருத்துவ வசதிகளுக்கும் அவர்கள் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வரும் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 12 நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட வர்த்தகரீதியில் அல்லாத விமானங்கள் மூலம் 15 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதில் 30 விமானங்கள் வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தும், மற்றவை அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வங்க தேசத்திலிருந்தும் வருகின்றன எனத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.
இந்த நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்களில் தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பகுதி உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் தொடங்கப்பட்ட ஆன்லைன் தளத்தில் இந்தியா திரும்ப இதுவரை 2 லட்சம் இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பிரிக்கப்பட்டு படிப்படியாக தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதில் கர்ப்பிணிகள், முதியோர், வேலையிழந்தவர்கள், மருத்து வசதிக்காகக் காத்திருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்கான பயணிகள் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் அபுதாபி, துபாயில் உள்ள இந்தியத் தூதரகங்கள் ஈடுபட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் குறித்து அறிவிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.