நோய்க்கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் நாடு முழுதும் மதுபானக் கடைகள் திறப்பால் திங்களன்று மக்கள் மதுபானங்களுக்காக நீண்ட வரிசையில் கடைகள் முன் நின்று மது வாங்கிச் செல்கின்றனர், இதனால் சமூக விலகல் என்ற முக்கியமான கரோனா பரவல் கட்டுப்பாடுகள் உடைந்தன.
பெட்டிக்கடைகள் தேநீர் கடைகள் உடன் மதுபானக் கடைகளும் கரோனா தடுப்பு பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் திங்களன்று திறக்கப்பட்டன.
தலைநகர் டெல்லியில் அரசு மதுபானக் கடைகளில் சமூக விலக்கலைக் கடைப்பிடிக்காமல் மக்கள் முண்டியடித்ததால் பல கடைகளை மூட நேரிட்டது. சில இடங்களில் போலீசார் சிறிதளவு பலப்பிரயோகம் செய்ய நேரிட்டது.
150 அரசு மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறக்க அனுமதிக்கயளிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் நிறைய குடிமகன்கள் கடை வாசலில் குழுமினர். இங்கு 26,000 மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. ராஜஸ்தானில் திறக்கப்பட்டு சமூக விலக்கல் நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படாததால் மூடப்பட வேண்டியதாயிற்று.
அரசு அறிவிக்கையின் படி மதுபானங்கள் விற்கும் கடைகள் சமூக விலகல் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் கடையில் 5 பேருக்கும் மேல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
மார்ச் 25க்குப் பிறகு மதுக்கடைகள் திறப்பதால் நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் காலை 10 மனி முதலே வாடிக்கையாளர்கள் வரிசை கட்டி காத்திருந்தனர்.
ஞாயிறன்று வெளியிடப்பட்ட அரசு உத்தரவில், கவுதம் புத்தா நகர் நிர்வாகம் மது சில்லரை மற்றும் மொத்த விற்பனையை அனுமதித்தது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை சரக்குகள் கிடைக்கும்..
ஒவ்வொரு கடை வாசலிலும் 5 வட்டம் போடப்பட்டு குறைந்தது 2 அடி இடைவெளியில் நின்று சமூக தூரம் கடைப்பிடிக்கப்பட்டு மக்கள் மதுவாங்கிச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மதுபானக்கடைகளை குடிமகன்கள் மொய்க்காமல் இருக்க போலீஸ் காவலும் போடப்பட்டிருந்தது.
சில இடங்களில் சமூக தூரம் கடைப்பிடிக்கப் படாததால் கடைகளை மூட நேரிட்டது.
சண்டிகரில் கட்டுப்பாடு அல்லாத மண்டலங்களில் அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மது விற்பனை கன ஜோராக நடந்தது.
இமாச்சலத்தில் முகக்கவசம் அணிந்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மதுவுக்காக முண்டினர்.
மும்பையிலும் புனேயிலும் கூட மதுபானக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
ஆனால் மகாராஷ்ட்ராவில் மும்பையில் சில இடங்களில் கடை திறக்கும் என்று குடிமகன்கள் காத்திருந்து பிறகு கடைதிறக்காததால் வெறுங்கையுடன் திரும்பியதும் நடந்தது.