காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவழிக்க முடியும்; புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் செலவிடமுடியாதா? மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

பிடிஐ

கடந்த பிப்ரவரி மாதம் குஜராத் வந்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்காக ரூ.100 கோடி செலவிட்ட அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் செலவிட முடியாதா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலில் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், ''பிரதமரின் கரோனா நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்க முடியும் உங்களால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் வசூலிக்காமல் இருக்க முடியாதா?'' என ரயில்வே துறையைச் சாடியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அதில் “குஜராத் வந்திருந்த அமெரிக்க அதிபரின் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிட முடியும். ரயில்வே அமைச்சகம் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ.151 கோடி நிதி அளிக்க முடியும். அதேபோன்ற பங்களிப்பை வேதனையில் வாடும் புலம்பெயர் தொழிலாளர்கள் பக்கம் மத்திய அரசு ஏன் அளிக்கவில்லை. அவர்களையும் இலவசமாக ரயில்களில் சொந்த மாநிலம் அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாதா?

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து வருகிறீர்கள். ஆனால் உள்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப ரயில் டிக்கெட்டுக்கு கட்டணம் வசூலிக்கிறீர்கள். தேசத்தைக் கட்டமைப்பவர்கள் தொழிலாளர்கள். ஆனால், அவர்களோ இங்கேயும், அங்கேயும் தடுமாற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த மாநிலம் அழைத்துச் செல்லும் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்த முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT