இந்தியா

மனைவி நினைவாக ‘மினி தாஜ்மகால்’: உ.பி. ஓய்வு பெற்ற தபால்காரர் கட்டுகிறார்

செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் ஓய்வு பெற்ற தபால்காரர் ஒருவர், மறைந்த தன் மனைவியின் நினைவாக, மினி தாஜ்மகால் ஒன்றைக் கட்டி வருகிறார். தற்போது, அவரிடம் போதிய பணம் இல்லாததால், அந்தப் பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.

புலந்துஷார் மாவட்டம் கேசர் கலன் கிராமத்தில் வசித்து வருபவர் பைசுல் ஹசன் காத்ரி. இவர் ஓய்வு பெற்ற தபால்காரர் ஆவார். இவருக்கு 1953ம் ஆண்டு தஜமுல்லி பேகம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

58 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ம் ஆண்டில், தொண்டைப் புற்றுநோய் காரணமாக, பேகம் இறந்தார். பின்னர் அவர் நினைவாகவே ஹசன் காத்ரி வாழ்ந்துவந்தார்.

இந்நிலையில், தனது மனைவிக்காக தாஜ்மகால் ஒன்றைக் கட்ட விரும்பினார் ஹசன் காத்ரி. அதனால், தன்னிடம் இருந்த சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்து மினி தாஜ்மகாலைக் கட்டத் தொடங்கினார். கிட்டத்தட்ட அனைத்துப் பணிகளும் முடிந்து தற்போது மார்பிள் கற்கள் பதிக்க வேண்டியதும், தாஜ்மகாலைச் சுற்றி சிறு தோட்டம் அமைக்க வேண்டியதும்தான் பாக்கி. ஆனால் அவற்றைச் செய்வதற்கு, தற்போது அவரிடம் பணமில்லை.

இதுகுறித்து அவர் கூறும்போது, "முதலில் என்னிடம் இருந்த ஒரு பகுதி நிலத்தை ரூ.6 லட்சத்துக்கு விற்றேன். பிறகு எனது மனைவியின் நகைகளை ரூ.1.5 லட்சத்துக்கு விற்றேன். எனது மனைவியை எனது தோட்டத்தில்தான் புதைத்தேன். அங்கு அவருக்கு ஒரு சமாதியையும் கட்டினேன்.

அதன்மேலே தற்போது குட்டி தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. இதுவரை ரூ.11 லட்சம் செலவு செய்திருக்கிறேன். இன்னும் மார்பிள் கற்கள் பதிக்கும் பணிக‌ளும், தாஜ்மகாலைச் சுற்றி சிறு தோட்டமும் ஏற்படுத்தும் பணிகள்தான் எஞ்சியுள்ளன. அவற்றுக்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும். ஆனால் இப்போது என்னிடம் பணமில்லை.

நான் தாஜ்மகாலைக் கட்டும் செய்தியை அறிந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் என்னைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள் ளார். அந்தச் சந்திப்பின்போது இந்த தாஜ்மகாலைக் கட்டி முடிப்ப தற்குத் தேவைப்படும் நிதி உதவியை அவர் செய்யலாம். ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனது மனைவி யின் நினைவாக எழுப்பப்படும் தாஜ்மகாலை என்னுடைய சொந்த செலவிலேயே கட்டுவேன்.

மாறாக, முதல்வரைச் சந்திக் கும்போது, என்னுடைய கிராமத் தில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு கல்வி வாரிய அங்கீகாரம் கிடைக்க உதவி கேட்பேன்.

நான் இறந்த பிறகு எனது உடலையும் என் மனைவியின் சமாதிக்கு அருகிலேயே புதைத்து விடச் சொல்லியிருக்கிறேன். எனது இறுதி சடங்குகளுக்காக நான் வக்பு வாரியத்தில் ஒரு தொகையைச் சேமித்து வைத்தி ருக்கிறேன். இப்போது எனது கவலையெல்லாம், நான் இறப்ப தற்கு முன்பு இந்த தாஜ்மகாலை கட்டி முடித்துவிட வேண்டும் என்பதுதான்" என்றார்.

SCROLL FOR NEXT