இந்தியாவில் கரோனா வைரஸ் வல்லரக்கனின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 2-வது நாளாக கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 72 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 42 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 707 பேர் குணமடைந்துள்ளனர். 29 ஆயிரத்து 453 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு 1,373 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 26 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 28 பேர் பலியாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லாததால் 64 ஆகத் தொடர்கிறது. ராஜஸ்தானில் 6 பேர் உயிரிழந்ததால் 71 ஆகவும், மேற்கு வங்கத்தில் 35 ஆகவும் அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் நேற்று ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 29 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 30 ஆகவும் அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆகவும், கர்நாடகாவில் 25 பேராகவும், ஆந்திராவில் 33 ஆகவும் மாற்றமின்றி தொடர்கிறது. பஞ்சாப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணாவில் 5 பேரும், பிஹாரில் தலா 4 பேரும், ஜார்க்கண்டில் 3 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 700 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,974 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,115 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து டெல்லியில் 4,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,362 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 5,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2,886 பேரும், தமிழகத்தில் 3,023 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 1,379 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,846 பேரும், தெலங்கானாவில் 1,082 பேரும், கேரளாவில் 500 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 401 பேர் குணமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் 2,645 பேர், ஆந்திராவில் 1,583 பேர், கர்நாடகாவில் 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 701 பேர், மேற்கு வங்கத்தில் 963 பேர், பஞ்சாப்பில் 1,102பேர், ஹரியாணாவில் 442 பேர், பிஹாரில் 503 பேர், அசாமில் 43 பேர், உத்தரகாண்டில் 60 பேர், ஒடிசாவில் 162 பேர், சண்டிகரில் 94 பேர், சத்தீஸ்கரில் 57 பேர், லடாக்கில் 41 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் 115 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 5 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மேகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசத்தில் யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.