உத்தரப்பிரதேச மாநிலம் எதாவா மாவட்டத்திலிருந்து வெளியாகிய மனதைப் பிசையும், அதிர்ச்சிகரமான இந்த வீடியோவில் கிராமம் ஒன்றில் உ.பி.போலீஸார் இருவர் ஒரு நபரை அடித்து உதைத்து துன்புறுத்தியதும் அவர் கெஞ்சுவதும் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
2 நிமிட வீடியோவான இதனை சமாஜ்வாதிக் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். இந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
வீடியோவில் போலீஸ் முதலில் தன் ஷூவினால் அந்த நபரின் முகத்தில் அடிக்கிறார். பிறகு கீழே படுத்த நிலையில் இருக்கும் இந்த மனிதனின் நெஞ்சின் மீது தன் ஷூ காலை வைத்து அழுத்துகிறார். அப்படியே லட்டியில் அடித்து நொறுக்குகிறார். அந்த நபர் அலறலும் போலீஸார் மனதை இரங்கச் செய்யவில்லை.
வீடியோவின் முடிவில் இன்னொரு கான்ஸ்டபிளும் சேர்ந்து அவரை அடித்து உதைக்கிறார்.
இது குறித்து எடாவா போலீஸ் நிலையம் தன் அறிக்கையில், தாக்கப்பட்ட நபரின் பெயர் சுனில் யாதவ் என்றும் போதைக்கு அடிமையானவர் என்றும், கிராமத்தினரை அடிக்கடி தாக்குவார் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமத்தினர் புகாரின் அடிப்படையில்தான் இவரைப் பிடித்ததாகவும் தாங்கள் பிடித்த போது இவர் கையில் கத்தி வைத்து ஊர்மக்களை தாக்க முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவரைப் பிடிக்க ‘குறைந்தபட்ச பலப்பிரயோகம்’ செய்யப்பட்டு பிடிக்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் மூத்த போலீஸ் அதிகாரிக்கு இது குறித்து அறிக்கை அனுப்பிய காவலதிகாரி கான்ஸ்டபிள்கள் அதீதமான பலப்பிரயோகம் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் இந்த நபர் மனநல சிகிச்சை மேற்கொண்டதாக இதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடித்து உதைத்த கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.