நான்கு மாவட்டங்கள் மட்டுமே சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட நிலையில், லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் முழு காஷ்மீரும் (10 மாவட்டங்கள்) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
நாட்டில் கரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து வைரஸின் பரவல் கட்டுப்படுத்தப்படும் தன்மைக்கேற்ப சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக மத்திய சுகாதார அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது. முழு காஷ்மீரும் சிவப்பு மண்டலமாகக் கருதப்படும் என்றும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள சில இடங்களைத் தவிர வேறு இடங்களில் தளர்வு அனுமதிக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாக் டவுன் மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து காஷ்மீர் பிரதேச ஆணையர் பி.கே. போலே கூறியதாவது:
''மத்திய சுகாதார அமைச்சகம் பண்டிபோரா, ஸ்ரீநகர், ஷோபியன் மற்றும் அனந்த்நாக் ஆகிய நான்கு மாவட்டங்களை மட்டுமே சிவப்பு மண்டலமாகவும், புல்வாமாவை பசுமை மண்டலமாகவும், காஷ்மீர் பிரிவின் மற்ற ஐந்து மாவட்டங்களான குல்கம், ஷோபியன், புட்கம், காண்டர்பால் மற்றும் பாரமுல்லா ஆகியன ஆரஞ்சு மண்டலமாகவும் வகைப்படுத்தியுள்ளது.
சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு இடையே , இங்கு வழங்கப்பட்டுள்ள விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் வகை மற்றும் எச்சரிக்கையின் நிலையில் மிகக் குறைந்த வித்தியாசம் உள்ளது. இந்த நேரத்தில் காவலர்களைக் குறைக்க எங்களால் முடியாது. மேலும் உத்தரவு வரும் வரை காஷ்மீரின் 10 மாவட்டங்களும் சிவப்பு மண்டலமாகக் கருதப்படும்.
பசுமை மண்டலம் என வகைப்படுத்தப்பட்ட ஒரே ஒரு மாவட்டமாக புல்வாமா மட்டுமே எங்களிடம் உள்ளது. மேலும் இந்த மாவட்டத்தில் கூட சில புதிய கரோனா பாதிப்புகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
எனவே, காஷ்மீர் பிரிவில் நான்கு மாவட்டங்களை மட்டுமே சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ள நிலையில், முழு காஷ்மீரும் சிவப்பு மண்டலமாக கருதப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள சிற்சில இடங்களைத் தவிர வேறு இடங்களில் தளர்வு அனுமதிக்கப்படாது''.
இவ்வாறு காஷ்மீர் பிரதேச ஆணையர் பி.கே. போலே தெரிவித்தார்.
ஜம்மு பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜம்மு, சம்பா, கத்துவா, ரியாசி, உதம்பூர், ராம்பன், பூஞ்ச், ராஜோரி, தோடா மற்றும் கிஷ்த்வார் ஆகிய 10 மாவட்டங்களும் ஆரஞ்சு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் எந்த மாவட்டமும் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படவில்லை.