இந்தியா

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கர்நாடகாவில் இருந்து செல்ல வேண்டாம்: எடியூரப்பா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கர்நாடகாவில் இருந்து செல்ல வேண்டாம் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைப்பயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தன.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் குஜராத்தில் சிக்கித் தவித்த ஆந்திராவைச் சேர்ந்த 800 மீனவர்கள் இன்று பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். 800 மீனவர்களும் ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்த பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கர்நாடகாவில் இருந்து செல்ல வேண்டாம் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கர்நாடகாவில் மே 4-ம் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணியாற்றவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் மாநில அரசு சார்பில் தொழில் நிறுவனங்களுடன் பேசியுள்ளோம். எனவே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கர்நாடகாவில் இருந்து செல்ல வேண்டாம்.’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT