பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

டெல்லியிலிருந்து உ.பி. செல்ல முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூவர் லாரி மோதி பலி: அலிகார் அருகே பரிதாபம்

பிடிஐ

டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்கு நடந்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மூவர் லாரி மோதி உயிரிழந்த சோக சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்தது.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் புலம் பெயர்தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்லலாம் என சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. லாக்டவுன் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பிறகு மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது.

இதற்கிடையில் லாக்டவுனில் சிக்கிய தொழிலாளர்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகினர். வேலை இழப்பும் நோய்குறித்த அச்சமும் சரியான உணவின்மையும் அவர்களை வாட்டியது.

லாக்டவுன் நெருக்கடிகள் ஒருபுறமிருக்க உ.பி.யைச் சேர்ந்த குடும்பம் ஒன்று நடந்தே ஊர் சென்று சேர முடிவெடுத்து நெடுஞ்சாலையில் லாரி மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலிகரின் புறநகரில் நடந்த இந்த சோக சம்பவத்தைப் பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

ஐந்து பேர் கொண்ட குழு திங்கள்கிழமை டெல்லியின் நரேலா வட்டாரத்தில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து 500 கிலோமீட்டர் தூரத்திற்கு ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்கு நடந்தே செல்வதென முடிவெடுத்தனர். மூன்று நாட்களில் அவர்கள் அலிகருக்கு 130 கிலோமீட்டர் தூரம் சென்றனர்..

வியாழக்கிழமை இரவு மத்ராக் பகுதிக்கு அருகிலுள்ள ஜி டி சாலையில் கோதுமை நிறைந்த டிராக்டரின் டிரைவர் அவர்கள் செல்லும் திசையில் செல்வதால் சில கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்ல ஒப்புக்கொண்டார். ஐந்து பேரையும் டிராக்டரின் பின்புறம் இருந்த டிராலில் அமர்ந்துகொள்ள சொல்லி டிரக்கை ஓட்டிச்செல்லத் தொடங்கினார்.

அதிகாலை 2 மணி அளவில் நகரைக் கடந்த சென்று கொண்டிருந்தபோது அவர்களது டிராக்டர்-டிராலி மீது ​​பின்னால் இருந்து வந்த லாரி ஒன்று வாகனத்தில் மோதியது.

இதில் ரஞ்சித் சிங் (44) மற்றும் அவரது உறவினர் தினேஷ் (37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பிந்தையவரின் மனைவி சாந்த்குமாரி (32) ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தனது மகன் பாகிரத்துடன் காயமின்றி தப்பிய ரஞ்சித்தின் மனைவி ராம்வதி (40), மாவட்ட மருத்துவமனையில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், இந்த மாத இறுதியில் திருமணம் செய்யவிருந்த அவரது மகள் மம்தா (18) உட்பட தனது கிராமத்தில் மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்று கூறினார்.

உ.பி.யில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அலிகார் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT