இந்தியா

மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின் உ.பி. தொழிலாளர்களை அழைத்து வர யோகி அரசு தீவிரம்

ஆர்.ஷபிமுன்னா

ஊரடங்கில் சிக்கிய வெளிமாநிலத்தவர்கள் தம் வீடு திரும்ப நேற்று முன்தினம் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, உத்திரப் பிரதேசத்தில் சிக்கியவர்களை அனுப்புவதிலும், வெளிமாநிலங்களில் சிக்கிய தம் மக்களையும் அழைப்பதிலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தீவிரம் காட்டுகிறது.

கரோனா வைரஸினால் அமலாக்கப்பட்ட ஊரடங்கினால் வெளிமாநிலங்களில் சிக்கிய உ.பி.வாசிகளுக்கு உதவ அம்மாநில முதல்வர் யோகி தமது 32 ஐஏஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுப்பு அதிகாரிகளாக (நோடல் ஆபிஸர்ஸ்) நியமித்திருந்தார்.

கடந்த மார்ச் 24 இல் வெளியிடப்பட்ட உத்தரவில், தமிழகம், புதுச்சேரிக்கு மூத்த செயலாளரான எம்.தேவராஜ்.ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இவ்விரு மாநிலங்களுடன் கேரளா மற்றும் லட்சத் தீவு ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் உ.பி. காவல்துறை ஏடிஜியான எல்.வி.ஆண்டனி தேவ்குமார் ஐபிஎஸ் அமர்த்தப்பட்டார்.

தமிழர்களான இருவரில் செயலாளரான தேவராஜ் விருதுநகரைச் சேர்ந்தவர். ஏடிஜியான ஆண்டனி தேவ்குமாரின் சொந்த ஊர் திருநெல்வேலியின் திசையன்விளை ஆகும்.

இவர்களிடமே மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பின் பொறுப்பும் அளிக்கப்பட உள்ளன. இதன்படி, இருவரும், உ.பி.யில் சிக்கிய வெளிமாநிலத்தினரை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணியைச் செய்ய உள்ளனர்.

அதேபோல், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கிய உ.பி.வாசிகளை தம் ஊர் திரும்பவும் வழிகாட்டிகள் உதவுவார்கள். இவர்களைப் போல், மற்ற மாநிலங்களுக்கும் ஏற்கெனவே நியமித்த 30 பொறுப்பு அதிகாரிகளிடமே அப்பணி அளிக்கப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி. காவல்துறை ஐஜியுமான ஆண்டனி தேவ்குமார் கூறும்போது, ‘ஊரடங்கினால் வெளிமாநிலங்களில் சிக்கிய உ.பி.வாசிகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளிடம் பேசி அளிக்கும் பணியை நாம் செய்து வருகிறோம்.

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் ஐந்து லட்சம் இந்தி பேசுபவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஒரு லட்சம் உ.பி.வாசிகள் இருப்பது அறியப்பட்டுள்ளது.

உ.பி.யினரின் 25,000 பேர் எங்களுக்கு போனில் ஊர் திரும்பப் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் ஓருசிலரே உள்ளனர்’ எனத் தெரிவித்தார்.

பொறுப்பு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

பொறுப்பு அதிகாரிகளில் ஒருவரான தேவராஜை 9415114075 அல்லது 0522-2288377 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்பிற்கு mduppc112@gmail.com எனும் விலாசம் வெளியிடப்பட்டுள்ளது.

மற்றொரு பொறுப்பு அதிகாரியான ஏடிஜியான ஆண்டனி தேவ்குமாரை 9454400162, 0522-2390243 ஆகிய எண்களிலும் மெயில் செய்ய antonydevkumar@gmail.comவிலாசத்திலும் தொடர்பு கொள்ளலாம் என உ.பி. அரசு குறிப்பிட்டுள்ளது.

உ.பி.யில் சிக்கிய தமிழர்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் புனித யாத்திரைக்கு வந்த தமிழர்கள் சுமார் 400 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர்கள் 22 ஆகும்.

உ.பி.யின் கோரக்நாத் மடத்திற்கு வந்த 34 தமிழர்கள் கோரக்பூரில் சிக்கியுள்ளனர். இதன் அருகிலுள்ள மஹராஜ்கன்ச் மாவட்டத்தில் நேபாளத்துக்கு சுற்றுலா வந்த 24 தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் கோரக்பூரின் ஆட்சியராக இருக்கும் சிவகங்கையை சேர்ந்த தமிழரான விஜயேந்திர பாண்டியன் ஐஏஎஸ் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

நாமக்கல், சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த சுமார் 20 பேர் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகள் இடும் பணிக்கு வந்து சோன்பத்ரா மாவட்டத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை அங்கு ஆட்சியராக இருக்கும் திருநெல்வேலியின் கடையநல்லூரைச் சேர்ந்த தமிழரான எஸ்.ராஜலிங்கம் ஐஏஎஸ் வேண்டிய உதவிகள் செய்து வருகிறார்.

தப்லீக் ஜமாத்தினர்

தப்லீக் ஜமாத்தின் டெல்லி மதமாநாடுகளுக்கு வந்து சிக்கிய தமிழர்களுக்கும் தம் சொந்த ஊர் திரும்பும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களில் கரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கும், அதன் சிகிச்சையில் குணமானவர்கள் மட்டுமே தமிழகம், புதுச்சேரிக்குத் திரும்ப அனுப்பப்படுவார்கள் எனக் கருதப்படுகிறது.

இவர்கள், உ.பி.யின் லக்னோ, நொய்டா, முராதாபாத், கான்பூர், சஹரான்பூர், சம்பல், பஸ்தி உள்ளிட்ட மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 5 முதல் 12 பேர் கொண்ட குழுக்களாக சிக்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT