உள்நாடு, அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறை அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகுர் உள்ளிட்டமூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் விரிவான விளக்கம் அளித்தனர்.
இக்கூட்டத்தில் “உள்நாடு மற்றும் அந்நிய முதலீட்டை ஈர்க்கவியூகங்களை வகுக்க வேண்டும்.அந்நிய முதலீட்டுக்கு மத்திய,மாநில அரசுகள் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும். புதிய ஆலைகள்அமைப்பதற்கு தேவையான நிலங்கள், வசதிகளை விரைந்து செய்துகொடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்” என்று அனைத்து துறை அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரைகளை கூறினார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்துஆய்வு செய்ய மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலாளர் அதானு சக்கரவர்த்தி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது பரிந்துரைகளை வழங்கியது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில்111 டிரில்லியன் டாலர் முதலீடுதேவை என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.