நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் வேலை தேடி வெளிமாநிலம் சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும் போதுமான உணவு கிடைக்காமலும் தவித்து வந்தனர். இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த மாநிலம் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ராஜஸ்தான் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களை நேற்று முதல் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பத் தொடங்கியது. நேற்று மட்டும் ஒரே நாளில் ராஜஸ்தானில் இருந்து 40 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய பிரதேசம் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.