டெல்லியில் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் கட்டும் மத்திய அரசின் விஸ்தா மறுமேம்பாட்டுத் திட்டத்துக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வழக்கறிஞர் ராஜீவ் ஷோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் ஆகியவற்றைப் போல ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றத்தைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தடை விதிக்கக் கோரியும் வழக்கறிஞர் ராஜீவ் ஷோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ''கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி டெல்லி மேம்பாட்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்து சட்டவிரோதமாக நிலம் எடுக்கப்பட்டு விஸ்தா மறுமேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதற்கான நோட்டீஸை மார்ச் 20-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் நோட்டீஸ் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது மத்திய அரசின் நோட்டீஸ் சட்டவிரோதமாாகும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவைக் காணொலி மூலம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜரானார்.
துஷார் மேத்தா வாதிடுகையில், “புதிய நாடாளுமன்றம் கட்டப்பட இருக்கிறது. இதனால் யாருக்கு என்ன பிரச்சினை? 2022-ம் ஆண்டு இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தக் கட்டிடம் கட்டப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, “கரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் நேரத்தில் யாரும் எதையும் செய்துவிடமாட்டார்கள். இதற்குத் தடை விதிக்க எந்த அவசரமும் இல்லை” எனக் கூறி தடை விதிக்க மறுத்துவிட்டார்.