இந்தியா

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: பஞ்சாப் அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

பஞ்சாபில் மே- 3ம் தேதிக் பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு கொண்டு வந்தது. கரோனா பாதிப்பு குறையாததையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு கொண்டு வருவதற்கு முன்பும், முதல் கட்ட ஊரடங்கு முடியும் முன்பும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் கரோனா பாதிப்பு குறைவாகவும், பாதிப்பே இல்லாத மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


இந்தசூழலில் மே 3-ம் தேதிக்குப் பின் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உட்பட சில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் பஞ்சாபில் மே- 3ம் தேதிக் பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியதாவது:
பஞ்சாபில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மே- 3ம் தேதிக் பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும். இருப்பினும் மக்கள் பொருட்களை வாங்க காலை 7 மணி முதல் 11 மணிவரை மட்டும் கடைகள் திறந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT