டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரீபக் கன்சால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றன. ஆதலால், அங்கு தங்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அனைத்துவிதமான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
எனவே, மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெறும் உரிமையை அவர்களுக்கு மீட்டுத் தர வேண்டும். இதற்காக, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை தற்போது அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை வரும் ஜூன் மாதம் முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய சூழலில் அத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து சரியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.